பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தடுப்பு கம்பிகளால் விபத்து அபாயம்
உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள நடைபாதைகள் நடக்க முடியாத நிலையில் உள்ளதுடன், காலைக் காயப்படுத்தும் தடுப்புக் கம்பிகளுடனும், கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலையிலும் உள்ளது.
சுகாதார சீர்கேடு
உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி பைபாஸ் சாலையில், பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் பொதுமக்களால் பயன்படுத்தப்படுவதில்லை. நடைபாதை அமைக்கப்பட்ட நாள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தாமல் தவிர்த்ததற்கு பக்கவாட்டில் அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகளும் ஒரு காரணமாக இருந்தது. பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ள இந்த நடைபாதை தற்போது படிப்படியாக வீணாகி வருகிறது. இந்த நடைபாதையை பலரும் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் அந்த வழியாக கடந்து செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தடுப்பு கம்பிகளால் விபத்து அபாயம்
நடைபாதைக்கு கீழே செல்லும் கழிவு நீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்படும்போது அவற்றை நீக்குவதற்காக ஆங்காங்கே திறப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மூடப்படாத நிலையில் உள்ளதால் எதிர்பாராமல் அந்த பகுதிக்கு குழந்தைகள் செல்ல நேரிட்டால் உள்ளே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் பக்கவாட்டில் இரும்பு குழாய்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக பஸ்கள் உள்ளே செல்லும் நுழை வாயில் பகுதியில் இந்த தடுப்புக் கம்பி சேதமடைந்து ஆபத்தான நிலையில் நீட்டிக் கொண்டுள்ளது. இது பலருடைய கால்களைப் பதம் பார்த்து காயங்களை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பஸ்சைப் பிடிப்பதற்கு வேகமாக செல்லும் பயணிகள் இந்த தடுப்பில் தடுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த தடுப்பை முழுமையாக அகற்றி விட்டு நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுபோல பஸ் நிலையத்தின் மறுபுறம் பழனி சாலையில் நகராட்சி வணிகக் கடைகளின் முன் போடப்பட்டுள்ள நடைபாதைகள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகை மற்றும் பொருட்கள் வைத்து நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் பயன்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. நடக்க முடியாத நிலையிலுள்ள நடைபாதைகளால், பொதுமக்கள் சாலையில் நடந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் நடைபாதையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.