குளத்தில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்பு


குளத்தில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்பு
x

கொடைக்கானல் அருகே குளத்தில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்கப்பட்டார்.

திண்டுக்கல்

சென்னை வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். அவருடைய மகன் தனுஷ் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவரும், சென்னை வடபழனி சாலிகிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் சந்துரு (18) என்பவரும் கடந்த 1-ந்தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். கொடைக்கானலில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூண்டி கிராமத்தில், தனியார் விடுதியில் அவர்கள் தங்கியிருந்தனர்.

கடந்த 6-ந்தேதி, அருங்காட்டுக்குளம் என்ற பகுதிக்கு அவர்கள் சென்றனர். அந்த குளத்தில் இறங்கி தனுஷ் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தனுஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்துரு, கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த 2 நாட்களாக போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் குளத்தில் தனுசை தேடினர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. 3-வது நாளாக நேற்று குளத்தில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது தனுஷ் குளத்துக்குள் பிணமாக மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையே தனுஷ் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷ் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.


Next Story