புதுக்கோட்டை மருத்துவ மாணவரின் உடல் சீனாவில் அடக்கம்


புதுக்கோட்டை மருத்துவ மாணவரின் உடல் சீனாவில் அடக்கம்
x

சீனாவில் உடல் நலக்குறைவால் கடந்த 1-ந் தேதி இறந்த புதுக்கோட்டை மருத்துவ மாணவரின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. காணொலியில் கண்டு பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

புதுக்கோட்டை

மருத்துவ மாணவர்

புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சாதலி. இவரது மகன் சேக்அப்துல்லா (வயது 22). இவர் சீனாவில் ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படித்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் சொந்த ஊர் திரும்பிய நிலையில் ஆன்லைன் மூலம் மருத்துவ படிப்பை வீட்டில் இருந்தபடியே படித்தார்.

இந்த நிலையில் 5 ஆண்டுகள் படிப்பு முடிந்த நிலையில் சான்றிதழ் பெறுவதற்காகவும், மருத்துவ பயிற்சி பெறுவதற்காகவும் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 11-ந் தேதி சேக் அப்துல்லா சீனா புறப்பட்டு சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சேக் அப்துல்லா கடந்த 1-ந் தேதி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுக்கு பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உடல் அடக்கம்

இந்த நிலையில் சேக் அப்துல்லாவின் உடலுக்கு அங்கேயே முஸ்லிம் மதப்படி இறுதிச்சடங்குகள் செய்து உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதையடுத்து சேக் அப்துல்லாவின் உடல் சீனாவில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்து காணொலியில் ஒளிபரப்பப்பட்டன. இதனை புதுக்கோட்டை போஸ்நகரில் உள்ள வீட்டில் பெற்றோர், உறவினர்கள் கண்டு கதறி அழுதனர். மாணவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இறந்தவரின் உடலுக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்த முடியாததை எண்ணி சோகமடைந்தனர்.


Next Story