காவிரி ஆற்றில் தேங்கிய தண்ணீரில் வாலிபர் பிணம்
மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்றில் தேங்கிட தண்ணீரில் வாலிபர் பிணம். கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்றில் தேங்கிட தண்ணீரில் வாலிபர் பிணம். கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
கட்டிட தொழிலாளி
மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆனந்தக்குடி சாலையை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் மீனாட்சிசுந்தரம் (வயது 34). கட்டிடங்களுக்கு பலகை அடிக்கும் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 2-ந் தேதி மாலை 6.30 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற மீனாட்சிசுந்தரம் வீடு திரும்பவில்லை.
அவரை பல்வேறு இடங்களில் அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாப்படுகை- சித்தர்காடு இடையே காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழே தேங்கிக் கிடந்த தண்ணீரில் ஒருவர் இறந்து கிடந்துள்ளதாக மீனாட்சிசுந்தரம் குடும்பத்திற்கு தகவல் வந்துள்ளது.
போலீசார் விசாரணை
இதனையடுத்து மீனாட்சிசுந்தரத்தின் அண்ணன் சண்முகசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது தண்ணீரில் இறந்து கிடந்தது மீனாட்சிசுந்தரம் என்பது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சிசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் மீனாட்சிசுந்தரம் தண்ணீரில் இறந்து கிடந்தது குறித்தும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.