வாய்க்காலில் இளம்பெண் பிணம்
வாய்க்காலில் இளம்பெண் பிணம்
தஞ்சை அருகே வாய்க்காலில் பிணமாக கிடந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் பிணம்
தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு பகுதியில் செல்லும் வடசேரி வாய்க்கால் தலைப்பில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்த பெண் யார்? என உடனடியாக தெரியவில்லை.
மேலும் இறந்து கிடந்த அந்த இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த துப்பட்டாவில் முடிச்சு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் நெற்றியிலும் ஒரு காயம் காணப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் வடசேரி வாய்க்காலில் சடலமாக கிடந்தது மேலஉளூர் தெற்கு தெருவை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகள் அகல்யா (26) என்பது தெரிய வந்தது. அகல்யா வடசேரி வாய்க்கால் பகுதிக்கு எப்படி வந்தார்? எதற்காக வந்தார்? எனவும், அவரை யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.