வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுப்பு


வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

வளர்ப்பு யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை கால்நடை மருத்துவ குழு மற்றும் பாகன்கள் தினமும் பராமரித்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்வது, ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வளர்ப்பு யானைகளின் உடல் நலனை கால்நடை மருத்துவ குழுவினர் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக 3 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ப்பு யானைகளின் உடல் எடையை கணக்கெடுத்து வருகின்றனர். உடல் குறைந்த யானைகளை கூடுதல் கவனம் செலுத்தி பராமரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வளர்ப்பு யானையின் உடல் எடையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

உடல் எடை கணக்கெடுப்பு

இந்த நிலையில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கும் பணி கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான எடை மையத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர் மனோகரன், வனவர் சரண்யா உள்ளிட்ட வனத்துறையினர் 18 வளர்ப்பு யானைகளின் உடல் எடையை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வசிம், ரகு, சேரன் உள்ளிட்ட யானைகளின் உடல் எடை சராசரியாக 200 கிலோ வரை அதிகரித்து உள்ளது. இதேபோல் மீதமுள்ள யானைகளின் உடல் எடை 30-ல் இருந்து 100 கிலோ வரை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. இனி வரும் நாட்கள் கோடை காலம் என்பதால் பசுந்தீவன தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது. 10 யானைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் எடை கணக்கெடுக்கப்பட வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story