கிணற்றுக்குள் விழுந்த பொக்லைன் எந்திரம்; முதியவர் பரிதாப சாவு


கிணற்றுக்குள் விழுந்த பொக்லைன் எந்திரம்; முதியவர் பரிதாப சாவு
x

கிணற்றுக்குள் விழுந்த பொக்லைன் எந்திரத்தில் இருந்த முதியவர் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

சேலம்

ஏற்காடு:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 25). பொக்லைன் ஆபரேட்டர். இவர் கடந்த சில நாட்களாக ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் அரசு பள்ளி கட்டும் கட்டுமான பணியில் பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை மாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணறு அருகில் பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி அதில் உள்ள பக்கெட் மூலம் தண்ணீரை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எந்திரத்தில் அதே பகுதியை சேர்ந்த கரியமலை (63) என்பவர் உடன் இருந்தார். இதனிடையே பொக்லைன் எந்திரத்தின் பாரம் தாங்காமல் கிணற்றின் சுற்றுச்சுவர் சரிந்தது. இதனால் பொக்லைன் எந்திரம் கிணற்றுக்குள் விழுந்தது. சதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்ததால் கிணற்றிற்கு மேலே வந்து விட்டார். கரிய மலை பொக்லைன் எந்திரத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கரியமலையை மீட்க முயன்றனர். கிணற்றில் சேறு அதிகமாக இருந்ததால் சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story