காவிரி ஆற்றில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து டிரைவர் பலி


காவிரி ஆற்றில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து டிரைவர் பலி
x

கதவணை கட்டுமான பணியின்போது காவிரி ஆற்றில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

கரூர்

பொக்லைன் எந்திரம் காவிரி ஆற்றில் கவிழ்ந்தது

கரூர் மாவட்டம் நன்செய் புகழூர்-நாமக்கல் மாவட்டம் அனிச்சம் பாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பவர் காவிரி ஆற்று தண்ணீருக்குள் இருந்த மணல்களை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று அகற்றிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் காவிரி ஆற்றில் கவிழ்ந்தது.

டிரைவர் பலி

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் மற்றொரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தண்ணீரில் கவிழ்ந்த எந்திரத்தை மேலே தூக்கி நிறுத்தினர். பின்னர் அடைக்கப்பட்டிருந்த டிரைவரின் இருக்கை கதவை திறந்து பார்த்தபோது ராஜேஷ் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேஷின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கண்டு கதறி அழுதனர்.

இதையடுத்து, வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான ராஜேஷுக்கு மோகனா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.


Related Tags :
Next Story