கிராம நிர்வாக அலுவலரை வீச்சரிவாளுடன் வெட்ட துரத்திய பொக்லைன் உரிமையாளர்


கிராம நிர்வாக அலுவலரை வீச்சரிவாளுடன் வெட்ட துரத்திய பொக்லைன் உரிமையாளர்
x
சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே மண் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை பொக்லைன் உரிமையாளர் வீச்சரிவாளுடன் வெட்ட துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தப்பி ஓடிய கிராம நிர்வாக அலுவலர் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

மண் கடத்தல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மானத்தாள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் வினோத்குமார் (வயது 32). இவருக்கு கடந்த 18-ந் தேதி தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருடைய விவசாய நிலத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் தாண்டவனூர் அருகே வாகன சோதனை செய்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரில் அனுமதி இன்றி ஒரு யூனிட் கிராவல் மண் கொண்டு வந்ததை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் நடத்திய விசாரணையில் முத்துசாமியின் விவசாய நிலத்தில் பொக்லைன் எந்திரம் கொண்டு மண் அள்ளப்படுவது தெரியவரவே சம்பவ இடத்துக்கு தொளசம்பட்டி போலீசாருடன் அவர் நேரில் சென்று பார்த்தார்.

பொக்லைன் எந்திரம் பறிமுதல்

அப்போது அரசு அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் கொண்டு மண் அள்ளப்படுவது தெரியவந்தது. உடனே மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக கனிமவளத்துறை புவியியலாளர் பிரசாந்த் தொளசம்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் விசாரணை நடத்தினார். பின்னர் பொக்லைன் எந்திர உரிமையாளரான மானத்தாளை சேர்ந்த சித்துராஜ் மற்றும் டிரைவர் விஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வீச்சரிவாளுடன் விரட்டினார்

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மானத்தாள் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் தனது சொந்த ஊரான தாரமங்கலத்தில் இருந்து மானத்தாளுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தொளசம்பட்டியை அடுத்த கரட்டூர் பிரிவு ரோடு அருகே அவர் வந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த பொக்லைன் உரிமையாளர் சித்துராஜ் வினோத்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார்.

பின்னர் அவர், கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அவரை தாக்கி செல்போனை பிடுங்கிக்கொண்டு வீச்சரிவாளால் வெட்ட முயன்று உள்ளார். சுதாரித்துக்கொண்ட வினோத் குமார் மோட்டார் சைக்கிளில் தப்பி உள்ளார். உடனே தனது மோட்டார் சைக்கிளில் சித்துராஜ் வீச்சரிவாளுடன் துரத்தி வரவே அதிர்ச்சியடைந்த வினோத்குமார் பாதுகாப்பு கேட்டு தொளசம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரை வீச்சரிவாளுடன் வெட்ட துரத்தி வந்த சித்துராஜை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மண் கடத்தலை தட்டி கேட்ட கிராம நிர்வாக அலுவலர், அலுவலகத்திலேயே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் தாக்கம் தணிவதற்குள் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மண் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை வீச்சரிவாளுடன் பொக்லைன் எந்திர உரிமையாளர் வெட்ட துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story