(செய்திசிதறல்) பாய்லர் ஆலை பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


(செய்திசிதறல்) பாய்லர் ஆலை பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x

பாய்லர் ஆலை பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருச்சி

பாய்லர் ஆலை பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலை முன்பு பி.எம். எஸ். தொழிற்சங்கம் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் மனோஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் தொழிலாளர்களை வேறு பாய்லர் ஆலை தொழிற்சாலைகளுக்கு மாற்றும்போது வெளிப்படை தன்மை மற்றும் எச்.ஆர்.ஏ. திருத்தம் கொண்டு வர வேண்டும். பாய்லர் ஆலை பாதுகாவலர்கள், தொழிலாளர்களை டெக்னிக்கல் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது பதவி உயர்வு, அடிப்படை ஊதியபிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

பணம் பறித்த 2 பேர் கைது

*திருச்சி கீழசிந்தாமணி ஓடத்துறையை சேர்ந்தவர் முருகன் (38). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடந்து வந்தார். அப்போது மேலசிந்தாமணி குடமுருட்டியை சேர்ந்த முகமது ரபீக் (28), சிந்தாமணி காந்தி நகரை சேர்ந்த வீரமணி (24) ஆகியோர் முரு கனை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

வீடு இடிப்பு

*சோமரசம்பேட்டைஅடுத்துள்ள தாயனூர் கிராமம் கீழதெருவை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (70). இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சந்திராவை சங்கன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்தநிலையல் வெள்ளையம்மாள் மகளுக்கு 2 சென்ட் இடத்தை தானமாக எழுதி கொடுத்தார். ஆனால் சந்திராவின் தாய் அனைத்து சொத்துக்களையும் தனது பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் வெள்ளையம்மாள் குடியிருந்து வந்த வீட்டையும் தனக்குதான் சொந்தம் என இடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுப்பு கடிதம்

*சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்திற்கான தொடர் விடுப்பு கடிதம் வழங்கினர். இந்த கடிதத்தை ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரனிடம் வழங்கினர். அப்போது, சங்க நிர்வாகிகள் லாசர், பிரசாத், ரவிக்குமார் உள்ளிட்ட 33 ஊராட்சிசெயலாளர்கள் இருந்தனர்

அரிசி ஆலைகள் மீது வழக்கு

*தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிரியால்டுடா பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (29). இவர் அந்த மாநிலத்தில் நவாப் என்ற பெயரில் காப்புரிமை பெற்று அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மணப்பாறை பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் நவாப் என்ற பெயரை போலீயாக அச்சிட்டு அரிசி விற்பனை நடைபெறுவதாக சம்பந்தப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் சுமார் 5 அரிசி ஆலைகள் மீது மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காத்திருப்பு போராட்டம்

*சமயபுரம் அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியில் பல மாதங்களாக மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இத தொடர்பாக புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று சமயபுரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமயபுரம் உதவி செயற்பொறியாளர் நாராயணன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story