கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியேறிய பொதுமக்கள்


கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியேறிய பொதுமக்கள்
x

கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த சத்தம் கேட்டு வீடுகளை விட்டு பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.

தேனி

கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த சத்தம் கேட்டு வீடுகளை விட்டு பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.

வெடிகுண்டுகள் வீச்சு

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில், நேசன் கலாசாலை என்ற அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளி, நேசன் கலாசாலை பள்ளி வீதியில் உள்ளது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு அந்த வீதிக்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென்று நாட்டு வெடிகுண்டுகளை அந்த சாலையில் ஒரே இடத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பலத்த வெடிசத்தம் கேட்டதுடன், கரும்புகை மூட்டம் எழுந்தது. அப்போது வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள், பலத்த வெடிசத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அலறியடித்தபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். உடனே இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

கதவுகள் சேதம்

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டுகள் வீசிய இடத்தை பார்வையிட்டனர். அப்போது 6 நாட்டு வெடிகுண்டுகள், வெடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டுகள் வெடித்ததில் அக்கம்பக்கத்து வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகள் சேதமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விடிய, விடிய அங்கேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வெடிகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். அதேபோல் தேனியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிக்கப்பட்ட வெடிகுண்டுகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பரபரப்பு-பதற்றம்

மேலும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி-சுருளிப்பட்டி செல்லும் சாலை வழியாக சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

எதற்காக வெடிகுண்டுகள் வீசப்பட்டது என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான தங்கதமிழ்செல்வனின் சொந்த ஊர், நாராயணதேவன்பட்டி. வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அவரது வீடு உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் நடைபயிற்சி சென்ற அவர், வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அறிந்தார். உடனே அவர் நேசன் கலாசாலை பள்ளி வீதிக்கு சென்று, அங்குள்ள மக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story