பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - இன்டர்போல் உதவியை நாட போலீசார் முடிவு


பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - இன்டர்போல் உதவியை நாட போலீசார் முடிவு
x

சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவசர அவசரமாக வீட்டிற்கு அழைத்து சென்ற காட்சி.

தினத்தந்தி 9 Feb 2024 9:35 AM IST (Updated: 9 Feb 2024 9:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு மர்பநபர் ஒருவர் நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

சென்னை,

சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நேற்று காலை 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் தகவல் வந்தது.

அந்த தகவலில், 'உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள். தாமதித்தால் குண்டு வெடித்துவிடும்' என்று கூறப்பட்டிருந்தது. இதுபற்றி காலை 10.30 மணியளவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல்கள் பறந்து வந்தன.

முதலில் 6 பள்ளிகளில் இருந்து வந்த தகவல் அடிப்படையில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய்களுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அடுத்தடுத்து 13 பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் வந்தது.

மீதமுள்ள 7 பள்ளிகளுக்கும் போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி, மிரட்டல் என்பது தெரியவந்தது. இதற்கிடையே இந்த தகவல் சென்னை முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்து பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்தனர். தங்கள் பிள்ளைகளை பதற்றத்துடன் அழைத்து வெளியேறினார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story