ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் வெடிபொருட்கள் பறிமுதல்
திருவிடைமருதூரில், தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர்;
திருவிடைமருதூரில், தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாட்டு வெடிகுண்டு வீச்சு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5-ந் தேதி நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் நடந்தது. இதில், சட்ரஸ் சேதமடைந்தது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி நகரை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.இந்த நிலையில் திருவிடைமருதூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத் உத்தரவின்படி திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.
வெடிபொருட்கள் பறிமுதல்
இந்த தனிப்படையினர் மற்றும் துப்பறியும் நாய்ப்படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினருடன் நேற்று சோதனை நடத்தினர். வெடிகுண்டு வெடித்த சம்பவ இடமான சட்ரஸ், கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் முருகன் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தர்மராஜ், சரண்ராஜ், முருகனின் அக்கா மகன் சக்திவேல் மற்றும் சக்திவேல் நண்பர் சரவணன் ஆகிய 5 பேரின் வீடுகளில் நேற்று இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த மூலப்பொருட்களான சைக்கிள் பால்ரஸ், ஆணிகள் மற்றும் பட்டாக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சதித்திட்டம் முறியடிப்பு
போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்த உள்ள தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைவரும் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த அதிரடி சோதனையால் நடைபெற இருந்த பெரும் குற்றச்செயலின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.