குமரி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


குமரி கோவில்களில்  சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x

திருக்கார்த்திகையையொட்டி கோவில்களில் நேற்று சொக்கப்பனை திருவிழாவும், வீடுகளில் பெண்கள் அகல்விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

திருக்கார்த்திகையையொட்டி கோவில்களில் நேற்று சொக்கப்பனை திருவிழாவும், வீடுகளில் பெண்கள் அகல்விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

சுசீந்திரம் கோவிலில்...

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வந்தது. இதையொட்டி கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு ஆகிய சொக்கப்பனை திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன், சாமி, பெருமாள், முருகன் ஆகியோர் வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வரும்போது சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகவதி அம்மன் கோவில்

இதேபோன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவு 9 மணிக்கு பகவதி அம்மன் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வரும் பொழுது சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இன்று அதிகாலையில் அம்மனுக்கு முக்கடல் சங்கமதில் ஆராட்டு வைபவம் நடக்கிறது. பின்னர் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மனுக்கு வழிபாடு நடக்கிறது.

மருந்துவாழ் மலை உச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகையையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதேபோன்று நாகர்கோவில் நாகராஜா கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளிமலை முருகன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப் பட்டது. இதில் ஆங்காங்கே உள்ள ெபாதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தீபம் ஏற்றி வழிபாடு

திருக்கார்த்திகையையொட்டி நேற்று மாலையில் பெண்கள் தங்கள் வீடுகளின் முன் பல வண்ண பொடிகளால் கோலமிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பெண்கள் வீடுகளில் கொழுக்கட்டை சமைத்து சாமிக்கு படையல் செய்து உறவினர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர். சிறுவர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.


Next Story