ஓசூரில் புத்தக திருவிழா
ஓசூரில் புத்தக திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி நடக்கிறது.
கிருஷ்ணகிரி:
ஓசூரில் புத்தக திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி நடக்கிறது.
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 நாட்கள் புத்தக திருவிழா நடக்கிறது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து, ஓசூர் ஓட்டல் ஹீல்ஸ் கூட்ட அரங்கில் வருகிற ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 12 நாட்கள் குளிர்சாதன வசதியுடன் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 100 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 2 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற உள்ளன.
கலை நிகழ்ச்சிகள்
தினமும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஓசூரில் மிகப்பெரிய மக்கள் திருவிழாவாக புத்தக கண்காட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மாணவர்களை புத்தக வாசிப்பவர்களாகவும், புத்தக வாசிப்பின் மூலம் தலை சிறந்தவர்களாக உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும். எனவே, மாவட்ட மக்கள் இந்த புத்தக திருவிழாவை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, ஓசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் வணங்காமுடி, மாநில செயலாளர் சேதுராமன், பொருளாளர் கண்மணி, அறம் கிருஷ்ணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.