நூலகத்துக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி பள்ளிக்கூடங்களில் புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்- தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேச்சு


நூலகத்துக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி பள்ளிக்கூடங்களில் புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்- தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேச்சு
x

பள்ளிக்கூடங்களில் நூலகத்துக்கு என்று நேரம் ஒதுக்கி புத்தகங்களை மாணவ-மாணவிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேசினார்.

ஈரோடு

ஈரோடு

பள்ளிக்கூடங்களில் நூலகத்துக்கு என்று நேரம் ஒதுக்கி புத்தகங்களை மாணவ-மாணவிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேசினார்.

புத்தக திருவிழா நிறைவுநாள்

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் கடந்த 12 நாட்கள் நடந்த ஈரோடு புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு ஈரோடு இந்து கல்வி நிலையம் தலைவர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., சென்னை புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் எஸ்.வைரவன், சிக்கய்யநாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் பரிசுகள் வழங்கி பேசினார். விழாவில் விடுதலை போராட்ட தியாகியும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கி.லட்சுமிகாந்தன் பாரதி கலந்து கொண்டு பேசினார்.

நூலக நேரம்

அப்போது அவர் கூறியதாவது:-

புத்தகம் என்பது ஒரு ஆசிரியரின் தவம். சிந்தனை. நமது கலாசாரம், பண்பாடு, மொழி, ஒழுக்கம் ஆகியவற்றை பாதுகாப்பவர்கள் புத்தக ஆசிரியர்கள்தான்.

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் நூலகம் செல்ல நேரத்தை ஒதுக்க வேண்டும். நூலக வகுப்பின்போது புதிய புத்தகத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அது மாணவர்கள் புத்தக வாசிப்பை தூண்டும்.

உலகமெங்கும் ஏராளமான சிந்தனையாளர்கள் இருந்தாலும் 2 பேரின் சிந்தனைகள் மட்டுமே நடைமுறைக்கு வந்து இருக்கிறது. ஒன்று காரல் மார்க்சின் கம்யூனிச சிந்தனை. இன்னொன்று தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனை. இந்த சிந்தனை பிறந்த இடம் ஈரோடு.

இவ்வாறு தியாகி லட்சுமிகாந்தன் பாரதி கூறினார்.

நீதிபதி

முன்னதாக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் பேசும்போது, 'வானொலி, தொலைக்காட்சி, செல்போன்கள் என காலமாற்றத்தில் வந்த மின்னணு சாதனங்களால் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. செல்போன்களால் குழந்தைகள் பல்வேறு சீர்கேடுகளில் சிக்கி உள்ளனர். இந்தநிலை மாற குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக வீடுகள் தோறும் நூலகங்களை அமைக்க வேண்டும்' என்றார்.

முடிவில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story