தூத்துக்குடியில் புத்தக திருவிழா: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் புத்தக திருவிழாவை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் புத்தக திருவிழாவை கனிமொழி எம்.பி நேற்று தொடங்கி வைத்தார்.
புத்தக திருவிழா
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தக திருவிழா தூத்துக்குடி ஏ.வி.எம். மகாலில் நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி கலந்துகொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முக்கியத்துவம்
உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து தரக்கூடியது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்தான். பேரறிஞர் அண்ணா, ஒரு வீட்டில் நூலகம் இல்லையென்றால் அதை வீடாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்வதில் இருந்தே புத்தகத்தின் முக்கியத்துவம் நமக்கு தெரிய வேண்டும். தான் படித்த புத்தகத்தை படித்து முடித்த பின்பு அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவரிடம் தெரிவிக்கும் அளவுக்கு அவர் வாசிப்பு பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். புத்தகங்கள் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் என்னால் ஒரு புது உலகத்தில் வாழமுடியும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் புத்தகங்களை, எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை பார்த்து பயந்தார்கள். இதனால் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. புத்தகத்தை, எழுத்தாளனை, சிந்தனையாளனை இல்லாமல் செய்துவிட்டால் இந்த மக்களை நாம் அடிமையாகவே வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் நினைத்தார்கள். இதனால் நாம் புத்தகங்களின் வீரியத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் சாதாரண வார்த்தை இந்த சமூகத்தை மாற்றக்கூடிய ஒன்றாக மாற முடியும். புத்தகங்களை தேடித் தேடி தனது சிந்தனையை செதுக்கிக் கொண்டவர்கள்தான் இந்த சமூகத்தில் உண்மையான தலைவர்களாக வந்திருக்கிறார்கள். எது நமது அடையாளம், எது நமது வரலாறு, எதை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு சொல்லித்தரக் கூடியது புத்தகங்கள். அனைவரும் படிப்பதற்காக புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கீதாஜீவன்
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, "தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் புத்தக திருவிழா நடந்து வருகிறது. புத்தகத்தின் முக்கியத்துவத்தை வருங்கால தலைவர்களாகிய இளைஞர்கள் அறிய வேண்டும், புத்தக பதிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும், புத்தகங்கள் பதிப்பிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும், முதல்-அமைச்சரின் முயற்சியால் புத்தக திருவிழா நடக்கிறது. ஜனவரி மாதத்தில் உலக அளவிலான புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது" என்றார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தாசில்தார் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.