நெல்லையில் புத்தக திருவிழா


நெல்லையில் புத்தக திருவிழா
x

நெல்லையில் புத்தக திருவிழாவை சபாநாயகர் அப்பாவு நேற்று தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 6-வது பொருநை புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பொற்கால ஆட்சி

முன்னதாக, ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாண்டி என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். அதன்பிறகு அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மக்களை படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல நூலகங்கள் ஆட்சி மாற்றத்தின்போது திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டன. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அந்த மண்டபங்கள் மீண்டும் நூலகமாக மாற்றப்பட்டன. மதுரையில் ரூ.114 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நெல்லையில் நூலகம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

11 நாட்கள்

தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற 72 பேர்களில் 12 பேர் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது நமக்கு பெருமை. இந்த ஆட்சி எழுத்தாளர்களுக்கு பொற்கால ஆட்சியாக அமைந்து உள்ளது. தமிழகத்தில் பட்டப்படிப்பு படிப்பவர்களின் வளர்ச்சி 52 சதவீதமாக உயர்ந்து இருப்பது நமக்கு பெருமையாகும். இந்த புத்தக கண்காட்சி 11 நாட்கள் நடக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பள்ளி மாணவர்களும் தங்களின் ஆசிரியர்களுடன் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை புத்தகங்களை வாங்கி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு புத்தக திருவிழா சிறப்பாக நடக்க வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் எம்.பி., கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா, நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், எழுத்தாளர் நாறும்பூநாதன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story