600 புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் திருட்டு
ஒரத்தநாடு அருகே அரசு பள்ளி பீரோவை உடைத்து 600 புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே அரசு பள்ளி பீரோவை உடைத்து 600 புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புத்தகங்கள் திருட்டு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கக்கரை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளிக்கு கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நேற்று வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், பள்ளி திறக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த (28-ந்தேதி) இந்தபள்ளிக்கு ஆசிரியர்கள் அலுவல் தொடர்பாக சென்றனர். பிறகு பணிகள் முடிந்ததும் பள்ளி கட்டிடத்தை பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.விடுமுறை முடிந்து நேற்று காலை பள்ளி திறக்கப்பட்டது. அப்போது பள்ளி கட்டிடத்துக்குள் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 600 புத்தகங்கள், பதிவேடுகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் திருட்டுப்போய் இருந்தது.
வலை வீச்சு
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி (வயது52) ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளியின் பீரோவை உடைத்து புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.அரசு பள்ளியில்இருந்த புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.