நூலக நண்பர்கள் திட்டத்தில் வீடு தேடி வரும் புத்தகங்கள்


நூலக நண்பர்கள் திட்டத்தில் வீடு தேடி வரும் புத்தகங்கள்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:30 AM IST (Updated: 9 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயன்பெறும் வகையில் வீடு தேடி வந்து புத்தகங்கள் வழங்கும் நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

திண்டுக்கல்

நூலகம்

தமிழகம் முழுவதும் மாவட்ட நூலகம், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் நாளிதழ்கள் மற்றும் வரலாறு, கதை, கவிதை புத்தகங்கள், மத்திய-மாநில அரசுளின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் இருக்கின்றன. இதனால் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் நூலகத்துக்கு வருகின்றனர்.

அதேபோல் மாவட்ட மைய நூலகத்தில் ரூ.30-ம், இதர நூலகங்களில் ரூ.20-ம் செலுத்தி பலர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதன்மூலம் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கின்றனர். மேலும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூலகர் தினவிழா, புத்தக தினவிழா, நூலக வாரவிழா போன்றவை நடத்தப்படுகின்றன.

நூலக நண்பர்கள் திட்டம்

அதேநேரம் மாற்றுத்திறனாளிகள், நூலகத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் முதியவர்கள், வீட்டு வேலையில் மூழ்கி கிடக்கும் பெண்கள் நூலகத்துக்கு வரமுடியாத நிலை இருக்கிறது. இதனால் புத்தக வாசிப்பு ஆர்வம் இருந்தும் அவர்களால் நூலகத்துக்கு வந்து விருப்பமான புத்தகங்களை வாசிக்க முடியவில்லை.

இந்த குறையை போக்கும் வகையில் நூலக நண்பர்கள் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் நூலக நண்பர்களாக சேர்க்கப்படுகின்றனர். இந்த நூலக நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் 25 புத்தகங்கள் வழங்கப்படும்.

வீட்டுக்கு வரும் புத்தகம்

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்களை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று அவர்கள் விரும்பிய புத்தகங்களை வழங்குவார்கள். அதேபோல் நூலக நண்பர்களிடம் விரும்பிய புத்தகத்தை அவர்கள் கேட்டு பெறலாம்.

பின்னர் 15 நாட்கள் கழித்து நூலக நண்பர்கள் மீண்டும் வந்து புத்தகங்களை பெற்றுக்கொண்டு வேறு புத்தகத்தை வழங்குவார்கள். இதன்மூலம் நூலகத்துக்கு வர இயலாத நிலையில் இருப்போரின் வாசிப்பு ஏக்கம் தீரும். வீட்டில் பெரியவர்கள் புத்தகம் வாசிப்பதை பார்த்து, குழந்தைகளும் புத்கம் வாசிக்க தொடங்குவார்கள். அதேபோல் நூலகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் உயரும்.

15-ந்தேதி தொடக்கம்

இந்த நூலக நண்பர்கள் திட்டத்தின் தொடக்க விழா திண்டுக்கல்லில் வருகிற 15-ந்தேதி நடைபெற இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 250 பேர் நூலக நண்பர்கள் திட்டத்தில் இணைந்து உள்ளனர்.


Next Story