காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சட்டமன்ற அளவிலான பூத் கமிட்டி கூட்டம் திருவாடானையில் நாளை நடக்கிறது.
தொண்டி,
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சட்டமன்ற அளவிலான பூத் கமிட்டி கூட்டம் திருவாடானையில் நாளை நடக்கிறது.
நிர்வாகிகள் கூட்டம்
திருவாடானையில் சட்டமன்ற தொகுதி அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கருமாணிக்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அனைவரையும் வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாடானை சட்டமன்ற தொகுதி அளவிலான பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் திருவாடானையில் ஒரு மகாலில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் உள்ள 347 வாக்குச்சாவடி மையங்களின் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கே.எஸ்.அழகிரி பங்கேற்பு
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். கூட்டத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மற்றும் காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள் மாவட்ட, வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, சேகர், சுப்பிரமணியன், மனோகரன், அன்வர், கந்தசாமி, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர்கள் முருகானந்தம், மரிய அருள், மனோகரன், ஊராட்சி தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்து ராக்கு, கார்த்திகேயன் ராஜா, நகர் காங்கிரஸ் தலைவர்கள் காத்த ராஜா, முகமது காசிம், செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.