காஷ்மீரில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்
காஷ்மீரில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின்உடல் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி வங்கட்டூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பவரின் மகன் சிட்டிபாபு (வயது 39), இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.
இவர் ராஜஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு பணி மாறுதல் பெற்று பாதுகாப்பு வாகனத்தில் சென்றார். காஷ்மீர் மாநிலம் இமயமலை தொடர்ச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆக்சிஜன் குறைபாடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் காஷ்மீர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 12-ந் தேதி இரவு உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான கல்லப்பாடி கிராமத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் மாலையில் கல்லப்பாடி இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்
மேலும் அவரது உடலில் போற்றப்பட்டிருந்த தேசிய கொடியை அவரது மனைவி பவித்ரா மற்றும் அவரது 5 மற்றும் 6 வயது பெண் குழந்தைகளிடம் வழங்கப்பட்டது. கண்ணீர் மல்க தேசிய கொடியை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.