ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுடன் நுண்ணீர் பாசன வசதி-கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி:
ஆதிதிராவிடர், பழங்குடியின் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறுடன், நுண்ணீர் பாசன வசதி அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
100 சதவீத மானியம்
வேளாண்மை பொறியியல் துறை மூலமாக பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2022-2023-ம் நிதி ஆண்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள், மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் 5 நபர்களுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரூர் தாலுகா தீர்த்தமலை குறுவட்டத்தில் வேப்பட்டி, பெரியப்பட்டி, வீரப்ப நாயக்கம்பட்டி, பென்னாகரம் தாலுகா ஏரியூர் குறுவட்டத்தில் ராமகொண்டஅள்ளி, கோடிஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சான்று
இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 1 முதல் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள மானாவாரி விவசாயிகள், சிறு குறு விவசாயி சான்றுடன் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற தர்மபுரியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம், தர்மபுரி மற்றும் அரூரில் செயல்படும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.