போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் ஆண்களும், பெண்களும் குவிந்தனர்
மத்தூர்:-
வேலைக்கு ஆள் எடுப்பதாக பரவிய வதந்தியை நம்பி போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் ஆண்களும், பெண்களும் குவிந்தனர். அவர்கள், தனியார் நிறுவனத்தினரிடம் விண்ணப்பங்களை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
ஆள் எடுப்பதாக வதந்தி
போச்சம்பள்ளியில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஆள் எடுப்பதாக தகவல் பரவியது. இதை நம்பி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அந்த தனியார் நிறுவனம் முன்பு சிப்காட் வளாகத்தில் காலை 7 மணிக்கே குவிய தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல தனியார் நிறுவனத்தினர் யாரையும் நேர்முக தேர்வுக்கு அழைக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் ஒன்று திரண்டு அந்த பகுதியில் நின்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கலைந்து சென்றனர்
இதுபற்றி அந்த தனியார் நிறுவனத்திடம் கேட்ட போது, நாங்கள் 80 பேருக்கு மட்டுமே வேலைக்கான ஆணை அனுப்பி உள்ளோம் என்றும், வேலைக்கு ஆள் எடுப்பதாக விளம்பரம் ஏதும் செய்யவில்லை என்றும்கூறினர். அப்போதுதான், வேலைக்கு ஆள் எடுப்பதாக சமூக வலைதளங்களில் வந்த வதந்தியை நம்பி ஏமாந்தது அவர்களுக்கு தெரியவந்தது.
அப்படி இருந்தும் வந்தவர்கள், எங்களது விண்ணப்பங்களையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினர். அந்த நிறுவனத்தினரும் வந்தவர்களது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டனர். பின்னர் சிப்காட் வளாகத்தில் குவிந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக சோகத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.