முதியவரிடம் செல்போன் பறித்து தப்பிய சிறுவன் கைது
முகவரி கேட்பது போன்று நடித்து முதியவரிடம் செல்போன் பறித்து விட்டு தப்பிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
முகவரி கேட்பது போன்று நடித்து முதியவரிடம் செல்போன் பறித்து விட்டு தப்பிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
திருவண்ணாமலை காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 62). சம்பவத்தன்று அந்தப் பகுதியில் நின்று இவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்தவர் முதியவரிடம் முகவரி கேட்பது போன்று பேச்சு கொடுத்துள்ளார். நடராஜனும் அவரிடம் முகவரி குறித்து பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நடராஜனின் செல்போனை அந்த நபர் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், 'திருடன்'... 'திருடன்'... என்று கூச்சலிட்டார்.
சிறுவன் கைது
அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மோட்டார்சைக்கிளில் அந்த நபர் மாயமாய் மறைந்து விட்டார்.
இதுகுறித்து நடராஜன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருடப்பட்ட செல்போனின் மதிப்பு ரூ.38 ஆயிரம். போலீசாரின் விசாரணையில் முதியவரிடம் செல்போன் பறித்துச் சென்றது கோரிமேடு பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவனை கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீசார் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.