குறி சொல்வதாக கூறி பெண்ணிடம் மோசடி-சிறுவன் கைது


குறி சொல்வதாக கூறி பெண்ணிடம் மோசடி-சிறுவன் கைது
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் குறி சொல்வதாக கூறி பெண்ணிடம் பணம், கொலுசை மோசடி செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் குறி சொல்வதாக கூறி பெண்ணிடம் பணம், கொலுசை மோசடி செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

குறி சொல்வதுபோல்...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி சத்தியபாமா.

சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த 17 வயது சிறுவன், குறி சொல்வதுபோல் வந்தான். அந்த சிறுவன், சத்தியபாமாவிடம், உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும், என்று கூறினான்.

இதை நம்பிய சத்தியபாமா, அதற்கு என்ன செய்ய வேண்டும்? என கேட்டுள்ளார். அதற்கு பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என அந்த சிறுவன் கூறினான்.

உடனே பரிகாரம் செய்வதற்காக ரூ.2870-ஐயும், ஒரு ஜோடி கொலுசையும் அந்த சிறுவன் வாங்கிக்கொண்டான். பின்னர் செம்பில் இருந்து ஒரு தகடு எடுத்து கொடுத்து உன் பிரச்சினை முடிந்து விட்டது. மாலை 6 மணிக்கு எனக்கு போன் செய்தால் மேலும் விவரங்களை சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றான்.

கைது

அதன்பிறகு சத்தியபாமா மாலை 6 மணிக்கு போன் செய்தபோது அந்த சிறுவன் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது தோழி பேபியிடம் சத்தியபாமா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவர்களுடைய உறவினர் எண் மூலம் சிறுவனை தொடர்பு கொண்டு பரிகாரம் செய்ய வேண்டுமென அழைத்துள்ளனர்.

அவன் சங்கரன்கோவில் கோவில்வாசல் அருகே வந்தபோது இருவரும் அவனை பிடித்து சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

மோசடி செய்த சிறுவனை பொறி வைத்து பெண்கள் பிடித்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story