கல்லூரி மாணவியை கொலை செய்த சிறுவன் கைது


கல்லூரி மாணவியை கொலை செய்த சிறுவன் கைது
x

கல்லூரி மாணவியை கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

திருச்சி

கல்லூரி மாணவி கொலை

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அழகுபாண்டி. இவரது மனைவி முத்தாலம்மாள். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 2-வது மகள் ஜோகிதா (வயது 18). இவர் திருச்சி தென்னூர் பாரதிநகரில் உள்ள தனது அத்தை மகாலெட்சுமி வீட்டில் தங்கி இருந்து சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகாலெட்சுமி மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

ஜோகிதாவின் அக்கா பவித்ரா கணவருடன் திருச்சியில் அத்தை மகாலெட்சுமி வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். இந்தநிலையில் மகாலெட்சுமி நேற்று முன்தினம் காலை மளிகை கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் ஜோகிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் மாலை அவருடைய தந்தை ஜோகிதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

உடலில் காயங்கள்

இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது மற்றொரு மகள் பவித்ராவுக்கு போன் செய்து, அவரை அத்தை வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். இதையடுத்து பவித்ரா அங்கு சென்று பார்த்தபோது, ஜோகிதா கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் கிடந்தார். இதைக்கண்டு கதறி அழுத பவித்ரா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து ஜோகிதாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் ஜோகிதாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு அவரது உடலை திருச்சிக்கு கொண்டு வரும்படி கூறினர். பின்னர் ஜோகிதாவின் உடல் திருச்சி வந்ததும், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து இருக்கலாம் என்று கருதி, இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள்.

சிறுவன் கைது

விசாரணையில், ஜோகிதாவின் உறவினரான அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இதற்கிடையே ஜோகிதாவுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்துள்ளனர். இது பற்றி அறிந்த அந்த சிறுவன் நேற்று முன்தினம் மாலை ஜோகிதா வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கியதோடு கூர்மையான ஊசி போன்ற ஆயுதத்தால் அவரது கழுத்தில் குத்திவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அவனை போலீசார் அடைத்தனர்.


Next Story