காய்ச்சலுக்கு ஊசி போட்டதில் சிறுவன் சாவு; போலி செவிலியர் அதிரடி கைது
ராஜபாளையத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் திடீரென இறந்தான். இதுதொடர்பாக போலி செவிலியர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் திடீரென இறந்தான். இதுதொடர்பாக போலி செவிலியர் கைது செய்யப்பட்டார்.
சிறுவனுக்கு காய்ச்சல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மகேசுவரன். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களுடைய குழந்தைகள் யுவஸ்ரீ (வயது 10), கவிதேவநாதன் (6).
குடும்ப பிரச்சினை காரணமாக சில வருடங்களுக்கு முன்பு கற்பகவள்ளி தற்கொலை செய்து கொண்டார். எனவே தன்னுடைய தாய் உதவியுடன் மகேசுவரன் குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கவிதேவநாதனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே அருகே உள்ள ஒரு இடத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். செவிலியர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மீண்டும் அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், சம்பந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர் பாஸ்கரன் சிறுவனுக்கு காய்ச்சலுக்கு ஊசி போட்டு உள்ளார். மேலும் உடன் சென்ற சிறுமி யுவஸ்ரீக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அவளுக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.
மூச்சு திணறல்
சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு கவிதேவநாதனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவனை டாக்டர் பாஸ்கரனிடம் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சிறுவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுவனை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடல் பரிசோதனை
இதுகுறித்து மகேசுவரன் அளித்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். சிறுவனின் உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் மாவட்ட இணை இயக்குனர் முருகவேல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலு சிவலிங்கம், நகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா ஆகியோர் இறந்த சிறுவனின் வீட்டில் சோதனை செய்தனர்.
போலி செவிலியர் கைது
சிகிச்சை குறித்து உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்கு முன்னதாக அருகே உள்ள செவிலியரிடம் சிகிச்சை எடுத்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் செவிலியர் ஆக்னெஸ்ட் கேத்ரின் (47) வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் முறையான படிப்பு இன்றி பல வருடங்களாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலி செவிலியர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் இருந்து ஆங்கில மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மருந்துகளின் தரம், காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து, மருந்துகள் ஆய்வாளர் பால்ராஜா ஆய்வு நடத்தினார்.
மேலும் சிறுவனின் உடல் பரிசோதனைக்கு பிறகுதான், இறப்புக்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர்.