காதலனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு


காதலனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலை செய்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த காதலிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலை செய்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த காதலிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவியுடன் காதல்

மார்த்தாண்டம் அருகே உள்ள கல்லுத்தொட்டியை சேர்ந்தவர் ரகுபதி, ஆடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு வெர்ஜின் ஜோஸ்வா (வயது 24) உள்பட 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகனான வெர்ஜின் ஜோஸ்வா மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்ட படிப்பு படித்து வந்தார். அப்போது அவருடன் அதே கல்லூரியில் படித்த மடிச்சல் பகுதியை சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர்.

கல்லூரி படிப்புக்கு பிறகு வெர்ஜின் ஜோஸ்வா தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக சென்று வந்தார். ஆனால் அந்த மாணவி மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் அவர்களுடைய காதலில் பிளவு ஏற்பட்டது. மாணவி வெர்ஜின் ஜோஸ்வாவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதை பொறுத்து கொள்ள முடியாத வெர்ஜின் ஜோஸ்வா காதலியிடம் தன்னை திருமணம் ெசய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

அரிவாள் வெட்டு

இதற்கிடையே மாணவி, வெர்ஜின் ஜோஸ்வாவிடம் இருந்த தனது மடிக்கணினியை திரும்ப கேட்டார். அப்போது வெர்ஜின் ஜோஸ்வா மடிக்கணினியை தருவதாக கூறி காதலியை நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு மார்த்தாண்டம் பஸ் நிலையத்துக்கு வரவழைத்தார். பின்னர் அவரை தனது ஸ்கூட்டரில் ஏற்றி மார்த்தாண்டம் அருகே உள்ள உதியனூர்குளம் சாலை பகுதிகளில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சென்றார். அங்கு வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை வற்புறுத்தினார். அவர் சம்மதிக்காததால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காதலியை சரிமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாணவி மயங்கி விழுந்தார். தொடர்ந்து வெர்ஜின் ஜோஸ்வா அங்கிருந்து தப்பி சென்று மாமூட்டுக்கடை பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தீவிர சிகிச்சை

இதற்கிடையே படுகாயம் அடைந்த மாணவி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி தற்போது அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாணவி ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். மாணவியின் தாயார் கூலி வேலைக்கு சென்று மிகவும் சிரமப்பட்டு அவரை கல்லூரியில் படிக்க வைத்துள்ளார். தற்போது மாணவி அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவரது குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

உறவினர்களிடம் ஒப்படைப்பு

அதே சமயத்தில் காதலன் வெர்ஜின் ஜோஸ்வாவின் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிேரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.


Next Story