லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் என்கிற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
இதையடுத்து மாலையில் ஹம்ஸ வாகன பெருமாள் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இந்த பிரம்மோற்சவத்தை யொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மேலும் வெவ்வேறு வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 31-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 2-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமி கவுண்டர் செய்து வருகிறார்.