மூளைச்சாவு அடைந்த கரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த கரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

சாலை விபத்து

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ் கீழ்புறம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் செந்தில் (வயது 33). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 1-ந்தேதி கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூளைச்சாவு

டாக்டர்கள் செந்திலுக்கு தீவிர சிகிச்சைக்கு அளித்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்களால் உறுதி செய்யப்பட்டது. அதனை அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடல் உறுப்பு தானம் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவரது தந்தை மற்றும் அவரது தங்கையின் ஒப்புதல் பெற்றப்பிறகு நேற்று மூளைச்சாவு அடைந்த செந்திலின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் 2 கண்கள் அறுவை சிகிச்சை மூலமாக தானமாக பெறப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மரியாதை செலுத்தப்பட்டு அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

கல்லீரல்

மேலும் அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி தானமாக பெறப்பட்ட உறுப்புகளில் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு நேற்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள சிறுநீரக நோயாளிக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் திருச்சி காவிரி மருத்துவமனையில் உள்ள கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கண்தானமும் தகுதியான பார்வை இழந்த நபருக்கு பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story