அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கிளைகளை உருவாக்க வேண்டும்
கிராமங்கள் தோறும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கிளைகளை உருவாக்க வேண்டும் என சங்க பொதுச்செயலாளர் பேசினார்.
வெளிப்பாளையம்:
கிராமங்கள் தோறும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கிளைகளை உருவாக்க வேண்டும் என சங்க பொதுச்செயலாளர் பேசினார்.
மாநில மாநாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30-வது மாநில மாநாடு நாகையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நாகை புத்தூரில் இருந்து தொடங்கிய பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த பேரணி நாகை அவுரி திடலில் வந்தடைந்தது. அங்கு இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அம்பிகாபதி வரவேற்றார். விவசாயிகள் சங்க தலைவர் அசோக்தாவ்லே, துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், வரவேற்பு குழு தலைவர் நாகைமாலி ஆகியோர் பேசினர்.
விவாதிக்கப்படும்
பின்னர் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா பேசியதாவது:-
தமிழகத்தில் சாதிய அடக்கு முறைகள் இல்லாத சமதர்ம சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என பெரியார் போராடினார். அதே கொள்கையே அகில இந்திய விவசாய சங்கமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். ஆனால் அதற்கான எந்த முயற்சியை அவர் எடுக்கவில்லை. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டிலும், கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெறவுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய மாநாட்டிலும் விவாதிக்கப்படும். அப்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
கிளைகளை உருவாக்க வேண்டும்
இதற்கு வலுசேர்க்கும் வகையில் கிராமங்கள் தோறும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கிளைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் உரிமைகளை பாதுகாக்க வலுவான இயக்கத்தை கட்டமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மாவட்ட பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.