கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு
தேவதானப்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
தேவதானப்பட்டி அருகே அ.வாடிப்பட்டியில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 29-ந்தேதி இரவு கோவில் கும்பாபிஷேக வரவு-செலவு கணக்குகளை பார்த்துவிட்டு பூசாரி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் சென்றுவிட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஜெயராமன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. கோவிலுக்குள் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. அதேபோல் கோவிலுக்குள் வைத்திருந்த 6 குத்துவிளக்குகள், மணிகள் திருடுபோயிருந்தது. மர்மநபர்கள் இரவு கோவிலுக்குள் புகுந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.