என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு
வேலூர் கொணவட்டத்தில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
என்ஜினீயர் வீட்டில் திருட்டு
வேலூர் கொணவட்டம் சக்திநகரை சேர்ந்தவர் பத்ரூதின் (வயது 35), சிவில் என்ஜினீயர். இவர் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பத்ரூதின் தாயார் மற்றும் அவருடைய மனைவி சையத் அலி பாத்திமா ஆகியோர் சக்தி நகரில் வசித்து வந்தனர். இருவரும் கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வாலாஜாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். 2 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை சையத் அலி பாத்திமா மற்றும் அவருடைய மாமியார் வீடு திரும்பினர்.
வீட்டின் முன்கதவை திறக்க முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. படுக்கை அறையில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த நகை, வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து சையத் அலி பாத்திமா உடனடியாக செல்போன் மூலம் கணவர் பத்ரூதின் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று வீடு, பீரோக்களை பார்வையிட்டு சையத் அலி பாத்திமா, அவருடைய மாமியார் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகை மாதிரியை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வீட்டில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர் என்று சையத் அலி பாத்திமா கூறுகிறார். ஆனால் பத்ரூதின் தாயார் சுமார் 20 பவுன் நகைகள் மற்றும் கவரிங் நகைகளை மர்மநபர்கள் திருடியதாக தெரிவித்தார். இருவரும் திருட்டு போன நகைகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அவர்கள் புகார் எதுவும் அளிக்கவில்லை. அவர்கள் அளிக்கும் புகாரின்பேரில் வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பத்ரூதின் வீட்டை நன்கு நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கொணவட்டம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.