வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சத்து 61 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் (வயது 43). சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தாயார் கவுசல்யாவுடன் தொழுவூர் பகுதியில் சிடி.எச்சாலையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு அகிலன் திருவள்ளூர் அடுத்த பூண்டி நெய்வேலி கிராமத்தில் தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக சென்றார். பின்னர் அங்கயே தங்கினார். இதனால் வீட்டில் தனியாக இருந்த கவுசல்யா உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் வசிக்கும் தங்கை வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர் நேற்று காலை கவுசல்யா அவரது தங்கை சுகந்தியுடன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கவுசல்யா உள்ளே சென்று பார்த்தபோது வீட்டு மாடி அறையின் கதவை உடைந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 40 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சத்து 61 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்து அகிலன் கொடுத்த புகாரின் பேரில் நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற செவ்வாப்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டில் ஈடுபட்டவர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். திருட்டு குறித்து செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.