நகைக்கடை பூட்டை உடைத்து7 கிலோ வெள்ளி கொள்ளை
எட்டயபுரத்தில் நகைக்கடையில் பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இரும்பு பெட்டியை திறக்க முடியாததால் அதில் இருந்த தங்கநகைகள் தப்பின.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் நகைக்கடையில் பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இரும்பு பெட்டியை திறக்க முடியாததால் அதில் இருந்த தங்கநகைகள் தப்பின.
நகைக்கடை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 38). இவர் எட்டயபுரம் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அய்யனார் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் லேசாக திறந்த நிலையில் இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அய்யனாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறியபடி தனது கடைக்கு வந்தார்.
7 கிலோ வெள்ளி கொள்ளை
இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசுக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நகைக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
அதில், நகைக்கடையை இரவில் உரிமையாளர் பூட்டிச் சென்ற பிறகு நள்ளிரவில் மர்மநபர்கள் கடையில் புகுந்து அங்கு இருந்த வெள்ளி கொலுசுகள், வெள்ளிக் கொடி மற்றும் பழைய வெள்ளி பொருட்கள் என சுமார் 7 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும்.
தங்க நகைகள் தப்பின
மேலும், தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியில் கைப்பிடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. அந்த பெட்டியை மர்மநபர்களால் திறக்க முடியாததால் அதில் இருந்த தங்கநகைகள் தப்பின.
கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டும், கடைக்குள் இருந்த கேமராக்கள் திசைமாற்றியும் இருந்தன. மேலும் கேமரா பதிவுகளை சேமிக்கும் டி.வி.ஆர். மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை மர்மநபர்கள் அடித்து நொறுங்கி இருந்தது தெரியவந்தது.
வலைவீச்சு
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வெள்ளியை அள்ளிச்சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.