டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2¼ லட்சம், மதுபானங்கள் திருட்டு


டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2¼ லட்சம், மதுபானங்கள் திருட்டு
x

செந்துறை அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2¼ லட்சம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

பணம், மதுபானங்கள் திருட்டு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து விற்பனையாளர் சுப்பிரமணியன் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்தை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை டாஸ்மாக் கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கடைக்கு வந்து பார்த்தபோது லாக்கரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் மற்றும் ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரும்புலிகுறிச்சி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து விட்டு மற்றொரு கேமராவை மர்ம ஆசாமிகள் துணியை வைத்து மூடி வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் மதுபானங்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story