கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தில் ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள் கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர். நேற்று காலை அந்த வழியாக வயலுக்கு சென்ற பொதுமக்கள் பார்த்து கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.