குடிநீர் குழாய்கள் உடைப்பு; 2 மாதங்களாக பொதுமக்கள் அவதி


குடிநீர் குழாய்கள் உடைப்பு;               2 மாதங்களாக பொதுமக்கள் அவதி
x

மொடக்குறிச்சி பகுதியில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 2 மாதங்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை எப்போது அதிகாரிகள் சரிசெய்வார்கள்? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

ஈரோடு

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி பகுதியில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 2 மாதங்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை எப்போது அதிகாரிகள் சரிசெய்வார்கள்? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

காவிரி தண்ணீர்

மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த 23 ஊராட்சி பொதுமக்களுக்கும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அதனை சுத்திகரிப்பு செய்து வழங்குவதற்காக மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.412.12 கோடி ஒதுக்கப்பட்டது. மாநில அரசுடன் இணைந்து கடந்த 2021-ம் ஆண்டு மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சை காளமங்கலம் ஊராட்சியில் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள மன்னதாம்பாளையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இதற்காக மன்னதாம்பாளையம் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் கிணறு அமைத்து குழாய் அமைக்கப்பட்டது. நஞ்சை காளமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது.

கிணறு அமைக்கும் பணி

தண்ணீரை வினியோகிக்க மொடக்குறிச்சி ஒன்றியம் 4-ஆக பிரிக்கப்பட்டது. அதாவது மொடக்குறிச்சி, எழுமாத்தூர், பள்ளியூத்து மற்றும் கஸ்பாபேட்டை ஆகிய 4 இடங்களாக பிரிக்கப்பட்டு குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து, இதன் மூலம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு கிணறு அமைக்கும் பணியும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதிகாரிகளிடம் புகார்

மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குழாய் பதிப்பதற்காக குழிதோண்டும் போது பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் குடிநீர் இணைப்பு குழாய்களை உடைத்து விடுகின்றனர். இதனால் குடிநீர் வினியோகம் துண்டிக்கப்படுகிறது. இதையடுத்து குடிநீருக்காக பொதுமக்கள் கடந்த 2 மாதமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எதிர்பார்ப்பு

புஞ்சைக்காளமங்கலம் ஊராட்சியில் கணபதிபாளையம், வேலம்பாளையம், முத்தாயிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோல் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.

இதனால் தண்ணீர் வீணாவதோடு அந்த பகுதியில் ரோடும் சிதிலமடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடங்களை உடனே சரிசெய்யவேண்டும். பொதுமக்களின் எதிர்பார்ப்பை அதிகாரிகள் நிறைவேற்றுவார்களா?


Next Story