கூடலூர் பகுதியில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு
கூடலூர் பகுதியில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது
கூடலூர் நகர் பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது கூடலூர்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நகர பகுதியின் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெறுகிறது.
இதில் கூடலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று சாலையை தோண்டும் பணி நடந்தது. அப்போது கூடலூர், கம்பம் நகர பகுதிக்கு வரும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்லும் அவலநிலையை கண்ட பொதுமக்கள் வேதனை அடைந்தனர். எனவே அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வதை தடுக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். காலனி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சென்றது குறிப்பிடத்தக்கது.