குமரியில் 19 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்
குமரி மாவட்டத்தில் 19 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 19 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிக்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் அரவிந்த் பேசும்போது கூறியதாவது:-
காலை உணவுத்திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் நோக்கமே நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதால் இத்திட்டம் தொடங்கப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்கப்படும். நாட்டிலேயே முன்னோடியாக அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம் "முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம்" என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
19 அரசு பள்ளிகள்
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வாட்டர் டேங்க் சாலையில் அமைந்துள்ள சமையலறை ஒருங்கிணைந்த மைய சமையற்கூடமாக புதுப்பிக்கப்பட்டு காலை சிற்றுண்டி வழங்க தயார் நிலையில் உள்ளது. இந்த மையத்திலிருந்து முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வெட்டூர்ணிமடம், வடசேரி கலுங்கடி, வடசேரி, வடிவீஸ்வரம், வடக்கு இளங்கடை, தெற்கு இளங்கடை, சரக்கல்விளை, நாகர்கோவில் டவுண், கோட்டார் வாகையடி, பறக்கைரோடு சந்திப்பு, செட்டிக்குளம், சூரங்குடி, இலந்தையடி, பூச்சிவிளாகம், சித்திரைத்திருமகாராஜபுரம், கோவில்விளை, கீழகாட்டுவிளை, குளத்துவிளை, புல்லுவிளை ஆகிய 19 இடங்களில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் பேசினார்.
குறும்படம்
அதைத்தொடர்ந்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்த குறும்படத்தை அனைவரும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத்திட்டம்) ராஜசேகர், மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஆனந்த், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டார்கள்.