வீடு புகுந்து பள்ளி மாணவன் மீது கொதிக்கும் குழம்பு வீச்சு
குளச்சலில் வீடு புகுந்து பள்ளி மாணவன் மீது கொதிக்கும் குழம்பு வீசிய பக்கத்து வீட்டுக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சலில் வீடு புகுந்து பள்ளி மாணவன் மீது கொதிக்கும் குழம்பு வீசிய பக்கத்து வீட்டுக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொத்து பிரச்சினை
குளச்சல் துறைமுகத்தெரு மாதாகாலனியை சேர்ந்தவர் சகாய சசி. இவர் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் படகுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மிஸ்ட் ராபின் மிர்சன் (வயது16). இவர் குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாணவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். அப்போது பிரான்சிஸ் மகன் சஜி (32) என்பவர் மாணவனின் வீட்டுக்குள் புகுந்து அவரது தந்தை சகாய சசியை தகாத வார்த்தையால் திட்டினார். அப்போது தந்தையை திட்டியதை மாணவன் தட்டிக்கேட்டார்.
கொதிக்கும் குழம்பு வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த சஜி சமையல் அறையில் குக்கரில் கொதித்துக்கொண்டிருந்த சுண்டல் குழம்பை தூக்கி மாணவன் மீது வீசினார். இதில் மாணவனின் இடது வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சஜி, சகாய சசியை தாக்க முயன்ற போது தரையில் சிந்திக்கிடந்த சுண்டல் குழம்பில் வழுக்கி கீழே விழுந்தார். இதில் சஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
பின்னர் சஜி அங்கிருந்து வெளியேறி சிஞ்சு என்பவரை அழைத்து வந்து மாணவனின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவனும், சஜியும் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் சஜி, சிஞ்சு ஆகியோர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்