வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
x

வேளாங்கண்ணி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கதவு உடைக்கப்பட்டிருந்தது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் உக்கிரவேல். இவர் கடலூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி வள்ளி (வயது 47). கடந்த மாதம் 28-ந்தேதி உக்கிரவேல் தனது மனைவி வள்ளியுடன் வீட்டை பூட்டி விட்டு கடலூருக்கு சென்றுள்ளனர். பின்னர் கடலூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.

நகை-பணம் திருட்டு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உக்கிரவேல் அறைக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் நகை, வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளி சாவி கொத்து மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து வள்ளி கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story