அரசு பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருட்டு


அரசு பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருட்டு
x

கருங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அரசு பள்ளி

கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மூசாரி சந்திப்பில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 6-ந்தேதி மாலையில் பள்ளி நேரம் முடிந்ததும் தலைமை ஆசிரியை ஞானசெல்வம் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் சனிக்கிழமை திறனாய்வு தேர்வு நடந்தது. ஆனால் அலுவலகம் திறக்கப்படவில்லை.

ரூ.45 ஆயிரம் கொள்ளை

இந்தநிலையில் நேற்று பள்ளியின் இரவு காவலாளி குமாரி இறந்து விட்டார். இதனையொட்டி பணியாளர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோக்கள், மேஜைகள் திறந்திருந்தன. மேலும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் செலுத்துவதற்காக வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் மாணவ-மாணவிகளின் சிறுசேமிப்பு தொகையான ரூ.5,800 என மொத்தம் ரூ.45 ஆயிரத்து 800-ஐ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.

பீடி, போதைப்பொருட்கள்...

இதுகுறித்து தலைமை ஆசிரியை ஞானசெல்வம் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது தலைமை ஆசிரியை அறையில் போதைப்பொருட்கள், பீடிகள், டார்ச்லைட், தீப்பெட்டி, தண்ணீர் பாட்டில் ஆகியவைகள் கிடந்தன. திருட வந்த மர்ம ஆசாமிகள் அவற்றை விட்டுச் சென்றது தெரிய வந்தது. அவற்றை கைரேகை நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story