3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

ஆண்டிமடம் அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

நகை, பணம் திருட்டு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கோவில் வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 58), கூலிதொழி லாளி. இவர் தனது குடும்பத்துடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக்கொண்டிருந்த சந்திரசேகரனின் மனைவி சுசிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

அதேபோல் அருகில் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த பீரோவை உடைத்தனர். பின்னர் அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

இதையடுத்து வடக்குதெரு செந்தில் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்தனர். ஆனால் வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.ஆண்டிமடம் அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் நகை, பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story