கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு


கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
x

கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டுபோனது.

திருச்சி

மணிகண்டம்:

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அளுந்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள தானாய் முளைத்த முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி மாரிமுத்து கோவில் நடையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை கோவில் அருகே குடியிருக்கும் வீட்டுக்காரர்கள் கோவில் உள்ளேயும், ெவளியிலும் உள்ள மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து கோவில் முன்பு வந்து பார்த்துள்ளனர். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதையடுத்து அவர்கள் பூசாரி மாரிமுத்து மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கோவில் உள்ளே இருந்த 3 உண்டியல்கள் கடப்பாரை மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டு கிடந்தது. இதில் சிறிய அளவிலான 2 உண்டியல்களை திறந்து அதில் உள்ள பணத்தை மர்ம நபர்கள் திருடியதும், பெரிய உண்டியலை திறக்க முடியாமல் அங்கேயே போட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது. இது குறித்து பூசாரி மாரிமுத்து அளித்த தகவலின்பேரில் மணிகண்டம் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story