தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது; நத்தம் விசுவநாதன் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று பழனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று பழனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து பழனி மயில் ரவுண்டானா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி, முன்னாள் எம்.பி. குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் எவ்வித திட்ட பணிகளையும் செய்யவில்லை. அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஊழல் இல்லாத துறையே இல்லை. அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அனைத்து பணிகளும் செயலற்று முடங்கி உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசின் இந்த விரோத போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் மட்டுமின்றி மக்களும் திரளாக கலந்துகொண்டனர். அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்ட சூளுரை எடுத்துக்கொண்டனர்.
சாராய சாம்ராஜ்ஜியம்
தி.மு.க.வின் ஆட்சியில் சாராய சாம்ராஜ்ஜியம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுகிறது. அதேபோல் போலி மதுபானங்களும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் சுட்டி காட்டினால் அதை கண்டு கொள்வதில்லை. மாறாக சாராய பேர்வழிக்கு தான் ஊக்கம் அளிக்கின்றனர். விளைவு கள்ள சாராயத்தால் மக்கள் பலர் மரணித்து உள்ளனர். அ.தி.மு.க. சுட்டி காட்டியபோது உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் இறப்பு சம்பவம் நடந்திருக்காது. எனவே இதற்கு பொறுப்பு ஏற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்.
அரசின் தவறுகளை சுட்டி காட்டுபவர்கள், ஆட்சியை எதிர்ப்பவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க.வினர் செயல்படுகின்றனர். அதாவது குறைகளை எடுத்து சொல்பவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு, அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதுடன் சர்வாதிகாரி போல் செயல்படுகின்றனர். சினிமா துறையை உதயநிதி தனது கட்டுக்குள் வைத்து தயாரிப்பாளர்களை முடக்கி கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். இதுபோன்ற விரோத செயல்பாடுகளால் தி.மு.க. அரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இப்போது தேர்தல் வைத்தால்கூட மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர். இனிவரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சி.பி.ஐ. விசாரணை
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவரின் இலாகா மாற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் அவர் பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் கரூரில் வருமானவரி சோதனையின்போது அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் தவறு. எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன் (பழனி கிழக்கு), முத்துச்சாமி (பழனி மேற்கு), சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ரவிமனோகரன், லயன் அசோக், கொடைக்கானல் நகர செயலாளர் ஸ்ரீதர், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் அன்வர்தீன், மீனவரணி செயலாளர் மகுடீஸ்வரன், பேரூர் செயலாளர்கள் சக்திவேல் (பாலசமுத்திரம்), விஜயசேகரன் (நெய்க்காரப்பட்டி), சசிக்குமார் (ஆயக்குடி), பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.