மண் தட்டுப்பாட்டால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிப்பு


மண் தட்டுப்பாட்டால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் மண் தட்டுப்பாட்டால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர்கள் மற்றும் சூளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மண் தட்டுப்பாட்டால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர்கள் மற்றும் சூளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல் தயாரிக்கும் பணி

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, குறிஞ்சி, சங்கமங்கலம், வடவூர் நிர்த்தனமங்கலம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செங்கல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறும்.

வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களை கணக்கில் கொண்டு அதிகளவில் செங்கல் தயாரிக்கப்படும். இந்த கோடைக்காலமே செங்கல் தயாரிக்க ஏற்றகாலமாகும்.

மண் தட்டுப்பாடு

தற்போது நாகை மாவட்டத்தில் செங்கல் தயாரிக்க மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலை நம்பி உள்ள பெரும்பாலானோர் இதை விட்டு வேறு வேலைக்கு சென்று விட்டனர். பெரும்பாலான இடங்களில் செங்கல் சூளை வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து தென்கால் ஓரத்தூர் செங்கல் தயாரிப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை செங்கல் தயாரிப்புக்கு ஏற்ற காலமாக உள்ளது. மற்ற நாட்களில் விவசாய வேலைகளில் ஈடுபடுவோம்.எங்கள் பகுதியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

இதில் 1000-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இங்கு தயார் செய்யப்படும் செங்கல்கள், நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அனுமதி மறுப்பு

புழுதி மண்ணோடு ஆற்றில் இருந்து எடுக்கக்கூடிய சவுட்டு மண்ணை சேர்த்து செங்கல் தயாரிக்கப்படுகிறது. தற்போது செங்கல் தயாரிக்கும் மண்ணுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி மறுத்து வருகிறது. போலீசாரும் அதிக கெடுபிடி காட்டி வருகின்றனர்.செங்கல் தயாரிக்கும் மண் எது என தெரியாமல் எல்லா மண்ணையும் ஒன்றாக கருதுகின்றனர்.

இதனால் கடந்த ஆண்டுகளில் அதிக விலை கொடுத்து வாங்கிய மண்ணை தான் தற்போது செங்கல் தயாரிக்க பயன்படுத்தி வருகிறோம். இது தவிர புதிதாக மண் எடுக்க வாய்ப்பு இல்லை. வருங்காலங்களில் செங்கல் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் சூளையில் 25 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தற்போது மண் தட்டுப்பாட்டால் 2, 3 பேரை வைத்து குறைந்த அளவிலான செங்கல்லை தயாரித்து வருகிறோம். எனவே அரசு எங்களது நிலைமையை அறிந்து செங்கல் தயாரிப்பதற்கு மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வேறுவேலைக்கு செல்கின்றனர்

செங்கல் தொழிலாளி குமரவேல்:- வெயில் காலங்களில் தான் எங்களுக்கு வேலை இருக்கும். செங்கல் தயாரிப்பது தவிர வேறு தொழில் தெரியாது. கோடை மழையால் செங்கல் தயாரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்படும். அப்போது பெரிய அளவிலான தார்ப்பாய்களை பயன்படுத்தி வெளியில் காயவைத்த செங்கலை மூடி வைப்போம். இருந்தும் மழை நீரில் செங்கல்கள் கரைந்து விடும்.

மழை காலங்களில் செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். குறிப்பாக முன்பணம் பெற்றுக்கொண்டு செங்கல் சூளை அருகே குடிசைகளை அமைத்து வேலை செய்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்களுக்கு, வேலை இல்லாத நாட்களில் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலை ஏற்படும். அவர்களைக் கண்டறிந்து வாரியத்தில் பதிவு செய்து வேலையில்லாத நாட்களில் நிதிஉதவி வழங்க வேண்டும். இந்த நிலையில் மண் கிடைக்காததால், எங்கள் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை ஒவ்வொன்றாக மூடிவிட்டனர். இதனால் என்னை போன்ற ஏராளமான தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்று விட்டனர். நானும் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்றார்.


Next Story