திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்
சுட்டெரிக்கும் வெயிலால் திருக்கடையூர் பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மானியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருக்கடையூர்:
சுட்டெரிக்கும் வெயிலால் திருக்கடையூர் பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மானியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல் தயாரிக்கும் பணி
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், கிடங்கல், ஆக்கூர், பிள்ளைபெருமாள்நல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், சிங்கனோடை, ராதாநல்லூர் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செங்கல் தயாரிக்கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. செங்கல் தயாரிக்க கோடைக்காலமே சிறந்ததாகும். வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் அதிகளவில் செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதிகளில் தற்பொழுது செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வயல்களில் இருந்து புழுதி மண்
இதுகுறித்து செங்கல் தொழிலாளர்கள் கூறியதாவது, தை மாதங்களில் இருந்து ஆடி மாதம் வரை செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற காலமாக உள்ளது. குறிப்பாக வெயில் காலம் செங்கல் தயாரிப்பதற்கு ஏற்றதாகும்.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து புழுதி மண் அதிகமாக கிடைக்கிறது. இந்த மண்ணோடு ஆற்றிலிருந்து எடுக்க கூடிய சவுடு மண்ணை கலந்து பதப்படுத்தி அச்சுகளில் போட்டு செங்கல்களை வார்த்து எடுத்து வெயலில் நன்கு காய வைப்போம். அதன் பின்னர் காய வைத்த செங்கல்களை சூளையில் அடுக்கி வைத்து தீமூட்டி வேக வைப்போம்.
மானியம் வழங்க வேண்டும்
தொடர்ந்து செங்கல்களை விற்பனைக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம். மேலும் ஏப்ரல், மே போன்ற காலங்களில் சில சமயம் கோடை மழைப்பெய்கிறது. அப்போது பெரிய அளவிலான தார்பாய்களை பயன்படுத்தி செங்கல்களை மூடி வைப்போம். ஆனாலும் மழைநீர் சூழ்ந்து செங்கல்கள் கரைந்துவிடுகிறது.
மேலும் செங்கல் தயாரிக்க ஏற்ற மண்ணும் சரிவர கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும் என்றார்.