நடை மேம்பாலத்திற்கான இறுதி கட்ட பணி ஆரம்பம்
திருப்பூர்,ஆக.18-
திருப்பூர் மாநகரில் வாகனப்போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் புஷ்பா ரவுண்டானா பகுதியில் நடந்து வந்த நடைமேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. மாநகரின் வாகனப்போக்குவரத்தில் இந்த பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் இங்கு பாலம் அமைக்கும் பணி முழுமையடையாமல் இருப்பதால் பாதசாரிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக ரெயில் நிலையம் மற்றும் இரண்டு பெரிய மாநகராட்சி பள்ளிகள் அருகாமையில் இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்வழியாக அதிக அளவிலான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வழியாக நடந்து செல்கின்றனர்.
இதேபோல் அந்த நேரங்களில் பொதுவான வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் செல்வதால் மாணவ, மாணவிகள் சாலையை கடப்பதற்கு திண்டாடி வருகின்றனர். அதோடு சாலையை கடப்பவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் தினஷே்குமார் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து, கிடப்பில் போடப்பட்டிருந்த பாலத்தின் இறுதி கட்ட பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியை ஒட்டியவாறு படிகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயமின்றி நிம்மதியாக சாலையை கடந்து செல்வார்கள்.